நீரற்ற நதி

>> Thursday 17 December 2009



எவ்வித நினைவுகளுமற்று சும்மா இருக்க முடியுமா என்று பலநாட்கள் யோசித்ததுண்டு. 'முடியவே முடியாது. அப்படியொரு நிலை வாய்ப்பின் கிறுக்குப்பிடித்துத் தான் அலைய வேண்டியிருக்கும்' என்ற எனது வெற்று பினாத்தல்களையெல்லாம் தூக்கியெறிந்திருந்தது நேற்றைய என் இரவுப் பயணம். என்னவென்று சொல்லத் தெரியாத, முன்பின் அறிந்திராதவொரு சூழலில் சிக்கியதால் மிகவும் கனத்துப் போயிருந்தது மனம். செய்வதற்கு ஏதுமற்று 'இனி என்ன' என்பதை யோசித்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன். இதுவரைக்கும் இதைக் குறித்தான எவ்விதமான யோசனையும் வராமல் போனது ஆச்சரியத்தையும் சிறிது வெட்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது. என்னைக் கடந்து சென்ற மனிதர்களோ வாகனங்களோ மரம் செடி கொடிகளோ என்னிடம் எந்த விதமான சலனத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. மனநிலையை மாற்றியே தீர வேண்டுமென்ற நோக்கத்தோடு நான் செய்த அத்தனை செயல்களும் பயனற்றுப் போயிருந்தன. என்னிடமிருக்கும் மிகப் பிடித்தமான பாடல் தொகுப்புகளும் என்னைக் கைவிட்டதால் வலுக்கட்டாயமாக வெளியே வேடிக்கை பார்த்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன்.

கடந்து சென்ற நாட்கள் தந்த கசப்புகளை விழுங்கியபடி வெளியே பார்த்துக் கொண்டிருந்ததில் ஒரு மணிநேரம் கரைந்து போயிருந்தது. என் பயணத்தினூடே எதிர்ப்பட்டவையனைத்தும் என்னைக் கடந்து பின்னால் போய்க் கொண்டேஏஏஏ இருந்தன. 'பின்னாலயே போய்ட்டிருக்கற இந்த மரங்கள் மலைகள்லாம் 'இதுவும் கடந்து போகும்'ங்கறத நியாபகப்படுத்திட்டிருக்கோ?' என்ற எண்ணம் தோன்றியதும் சட்டென்று பிரேக் அடித்தாற் போல் மனம் ஓரிடத்தில் நிலை கொண்டது. தொலைந்து போன ஒன்றைத் திரும்பவும் கண்டறிந்தது போல் மனம் பரபரக்க ஆரம்பித்தது.

'ஏன் இப்படில்லாம் நடக்குது? எது இப்படி அலைய வைக்குது? இதுக்குலாம் என்ன காரணம்? அதைக் கண்டுபுடிக்க முடியுமா?' என்றெல்லாம் யோசித்தபடியே இருந்தேன். நிகழ்வை நாம் விரும்பியபடி அமைத்துக் கொள்ள/அதைத் தேக்கிவைத்துக் கொள்ள முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்ற அபத்தமான எண்ணமும் வந்து போனது. எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருந்த மனதை ஜன்னல் வழி வந்த காற்று தன் பாதைக்கு இழுத்து வந்தது.

ஒவ்வொரு முறையும் இதே பாதை தான், இதே பேருந்துப் பயணம் தான். ஆனால் ஒவ்வொரு முறையும் விதவிதமான அனுபவத்தைத் தருவதாகவே இருக்கிறது. நிஜத்தைச் சொல்வதென்றால் நேற்றையைப் போன்றதொரு இரவுப் பொழுதை இனிமேல் அந்தப் பாதையால் எனக்குத் தரவே முடியாது என்றே தோன்றுகிறது. மிகு கசப்பு, மிகுதியான மனநிறைவு என்ற இரு வேறுபட்ட நிலைகளின் உச்சத்தைத் தொட்டு வர முடிந்தது இந்தப் பயணத்தின் போது தான். நகரத்து வாசனையை மெல்ல மெல்ல முறியடித்து கிராமம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளத் தொடங்கியிருந்த பகுதியில் தான் என்னை என்னால் திரும்ப மீட்டுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை துளிர் விடத் தொடங்கியது. வெகு தூரத்திற்கு நீளும் மலைத்தொடர்களும் ஜில்லென்ற குளிர்காற்றும் மனதை நிரப்பத் தொடங்கியதில் கசப்புகள் தானாக விடை பெற்றுக் கொள்ளத் துவங்கின. பேருந்து விரையும் சத்தத்தைத் தவிர வேறு சத்தங்கள் ஏதுமற்ற அந்த நிலை மனதிற்கு மிகவும் உவப்பாயிருந்தது. நீண்டிருக்கும் அந்த மலைகளைப் பார்க்கையில் இந்த மலைகளையொட்டி தனது வாழ்வை அமைத்துக் கொண்ட மக்கள் பாக்கியசாலிகள் என்ற எண்ணம் வந்து போனது. இந்த மக்களைப் பற்றித் தனியாக ஒரு பதிவு எழுத வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறேன், வெகு காலமாய். கூடிய சீக்கிரத்தில் அதையும் எழுதி விட வேண்டும்.

அருகில் யாருமற்று இந்த இரவைப் பார்த்துக் கொண்டிருப்பது தான் எத்தனை சுகமானது. வாகாக அமைந்த ஜன்னலோர ஒற்றை இருக்கையால் அந்த இரவின் ரம்மியம் அதிகமாவது போலத் தோன்றியது. பூச்சிகளின் சப்தங்கள் கூட ஒடுங்கி விட்ட இரவில் பேருந்தின் சத்தம் மட்டுமே மெலிதாய் கேட்டபடி இருந்தது. நிலவொளி ஒரு மெல்லிய படலமாய் சுற்றிலும் கவிந்திருந்தது. கிராமத்துத் தடயங்களை மறைத்து நகரம் தன் அரிதாரங்களை மீண்டும் பூசிக் கொள்ள ஆரம்பித்திருந்தது. நகரம் மறைந்து மீண்டும் கிராமம் திரும்ப வரும் என்பது முன்பே தெரியுமாதலால் அதைப் பற்றிப் பெரிதாய்க் கவலைப்பட்டுக் கொள்ளவில்லை. அப்படியே கவலைப்பட்டாலும் என்ன நிகழ்ந்து விடப் போகிறது என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். ஒரு சிறு குன்றின் மீது பயணிக்க ஆரம்பித்திருந்தது பேருந்து. வளைந்து நெளிந்து செல்லும் அந்தப் பகுதியிலிருந்து பார்க்கையில் பளிச் பளிச்சென்ற வெளிச்சப்புள்ளிகளால் ஒளிர்ந்து நிறைந்திருந்தது நகரம். அதைப் பார்க்கப் பார்க்க மன அமைதியும் பரவசமும் கூடிக் கொண்டே போனது.

எனதிந்தப் பாதை வழியே ஆறு ஒன்று குறுக்கிடும். அதைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அதனிடம் நலம் விசாரிப்பது உண்டு. எப்போதும் சலசலக்கும் ஆறு அன்றைக்கு தன் இருப்பைக் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தது. அந்த ஆற்றைக் கடக்கும் போது ஏற்படும் சிலிர்ப்பையும் அந்த நீரின் குளுமையும் அதன் சப்தத்தையும் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்தச் சூழல் அன்றைக்கு வாய்க்காமல் போனதில் சற்றே ஏமாற்றமாய் இருந்தது. நீரற்ற அந்நதியின் அடர்ந்த மெளனம் எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்த என் மனதை சரேலென இழுத்து வேறெங்கோ கொண்டு போய்ச் செருகியதில் மீண்டும் ஒரு ப்ரேக் அடிக்கும்படி ஆனது. 'எப்போதும் இரு பெரும் கரைக்குள் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தால் ஒரு போதும் நதியாக முடியாது. கொஞ்சம் கனவு, கொஞ்சம் விதி மீறல், கொஞ்சம் தனிமை, கொஞ்சம் வறட்சி, சற்றே அதிக வேகம் இவையெல்லாம் வேண்டும் இயல்பைத் தக்க வைத்துக் கொள்ள' என்றதன் மெளனம் உணர்த்தியதாகவே பட்டது எனக்கு. நல்லவேளையாக அதன் மொழியை கிரகித்துக் கொள்ளும் மனநிலைக்குத் திரும்ப முடிந்திருந்தது அந்த நாளில்/நேரத்தில் எனக்குக் கிடைத்த வரமாகவே நினைத்துக் கொண்டேன்.

நீண்ட பயணமும் அதனால் கிடைத்த மனநிறைவும் ஒருவித நிம்மதியைத் தந்திருந்தது. நள்ளிரவைத் தாண்டியிருந்த அந்த நேரத்தில் என் அலைபேசி வழியே மெல்லிசைப் பாடல்களைக் கேட்கத் துவங்கி அப்படியே தூங்கிப் போயிருந்தேன். அந்த அதிகாலை நேரத்துக் குளிர்காற்றில் தெரிந்த மாற்றம் (மாநகரத்துக்கேயுரிய கலப்படக் காற்று) உன் வசிப்பிடம் வந்து விட்டது என்றெனை எழுப்பி விட்டிருந்தது. பேருந்து விட்டிறங்கும் போது நினைவுக்கு வந்தது, அந்நதியிடம் கேட்க நினைத்து மறந்து போன கேள்வியொன்று. அடுத்தமுறை சந்திக்கும் போது நிச்சயம் கேட்டுவிட வேண்டும்.

***

சென்ற மாதம் முப்பதாம் தேதி கிறுக்கியது இது. இன்று கணினியில் களையெடுத்துக் கொண்டிருந்த போது கண்ணில் சிக்கியதைப் பதிவேற்றம் செய்தாயிற்று... :)

- சகாராதென்றல்

Read more...

பாடலுக்கான சந்தம்

>> Sunday 6 December 2009

எனது முந்தைய பதிவில் வெள்ளித்திரையில் பாடல் எழுதுவதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் சந்தத்தினை பிறகு பதிவிடுவதாகக் குறிப்பிட்டிருந்தேன். சரியான சூழ்நிலை அமையாத காரணத்தால் சற்றே தாமதமாகத் தான் சந்தங்களைப் பெற முடிந்தது. அதனை ஒலி வடிவில் இங்கே கொடுத்துள்ளேன். என் அலைபேசியின் உதவியால் தான் சந்தத்தைப் பதிவு செய்ய முடிந்தது. இயன்றவரை தெளிவாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறேன். இது சரிவர புரியாத பட்சத்தில் FM Rainbow (101.40) கேட்டு சரிபார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.



பாடல்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டிய முகவரியும் சென்ற பதிவில் தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது. சரியான மின்னஞ்சல் முகவரி: airchennai@gmail.com



கலந்து கொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.




- சகாராதென்றல்

Read more...

வெள்ளித்திரைக்கு பாடல் எழுத ஒரு வாய்ப்பு

>> Thursday 3 December 2009

மனதில் கற்பனைகளையும் வெள்ளித் திரையில் தனது பாடல் வரிகள் ஒலிக்காதா என்ற ஏக்கத்தோடுமிருக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு ஓர் வாய்ப்பு. FM Rainbow பண்பலை (101.40) இதற்கான வாசலைத் திறந்து விட்டிருக்கிறது. S.S. குமரனின் இசையில் உங்கள் பாடல் வரிகள் ஒலிக்கப் போகிறது. விருப்பமிருக்கும் அன்பர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். திரைத்துறையில் பாடல் எழுத விழையும் அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


சூழல்:



ஊடலின் காரணமாகத் தன்னைப் பிரிந்திருக்கும் காதலியை நினைத்தும், தன் ஆத்மார்த்தமான காதலைப் பற்றியும் சொல்வதாக இருக்க வேண்டும்.


அதற்கான சந்தங்களையும் கொடுத்திருக்கிறார்கள். அதை சரிவரக் கேட்க இயலாத சூழலில் இருந்ததால் இங்கே குறிப்பிட இயலவில்லை. முடிந்தவரை கேட்டுப் பிறகு பதிவிடுகிறேன். நண்பர்கள் யாருக்கேனும் பாடலுக்கான மெட்டு தெரிந்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.


பாடல் வரிகளை அனுப்ப வேண்டிய முகவரி:


நிலைய இயக்குனர்,
அகில இந்திய வானொலி நிலையம்,
எஃப் எம் ரெயின்போ,
மைலாப்பூர்,
சென்னை 600 004


மின்னஞ்சல் மூலமாகவும் உங்கள் பாடல் வரிகளை அனுப்பி வைக்கலாம்.
மின்னஞ்சல் முகவரி: airchennai@gmail.com


படைப்பின் இறுதியில் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் குறிப்பிடப்பட வேண்டும்.


பாடல் வரிகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி: டிசம்பர் 16, 2009

***


பின் குறிப்பு:

பண்பலை அலைவரிசைகளைக் கேட்டுக் கொண்டிருந்த போது கிடைத்த செய்தி இது. மேலும் விரிவான தகவல்கள் வேண்டுவோர் FM Rainbow (101.40) கேட்டு அறிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இது குறித்து நீங்கள் அறிந்த தகவலை பின்னூட்டத்தில் தெரியப்படுத்தினால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.



பிற்சேர்க்கை: பாடல் வரிகளை அனுப்புவதற்கான கடைசித் தேதி டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

- சகாராதென்றல்

Read more...

  © Template created by Ourblogtemplates.com

  © Copyright Saharathendral